ஒரு ஊரில் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் நல்லவன். நீதியும், நேர்மையும் கொன்டவன். அதனால் மக்கள் அவனிடம் மிகவும் அன்பு கொண்டவர்களாக இருந்தனர்.
ஒரு நாள் மன்னன் காட்டிற்கு வேட்டையாடப் போனான் . அங்கு ஒரு வயதான விறகுவெட்டியைப் பார்த்தான். அவன் விறகுகளை தலையில் சுமந்து கொண்டு தள்ளாடியபடி சென்று கொண்டிருந்தான். அவனை இந்த நிலையில் பார்த்த அரசன் மனம் மிகவும் வருந்தினான். இவர் எதற்காக இப்படி கஷ்டப்படுகிறான் என்று நினைத்தான். பிறகு விறகுவெட்டியைப் பார்த்து, ” ஏன் ஐயா இப்படி கஷ்டப்படுகிறாரகள்? உங்களுக்கு உதவுவதற்கு யாருமே இல்லையா?”என்று கேட்டான்.அதற்கு விறகுவெட்டி அரசைப் பார்த்து,” அரசே எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் கல்யாணம் ஆன பிறகு அவர்கள் மனைவிமார்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு எங்களை விட்டுவிட்டு தனியாக சென்று விட்டார்கள்.எனவே நானும் என் மனைவியும் மட்டும் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்”, என்று சொன்னான்.
இதனைக் கேட்ட அரசன் மனம் இளகி, தன் நாட்டில் உள்ள சந்தனைக் காட்டின் ஒரு பகுதியை அவனுக்கு தானமாகக் கொடுத்தான். இதைக்கேட்ட விறகுவெட்டி மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.அரசனுக்கும் விறகுவெட்டிக்கு சந்தனக் காட்டை தானமாக கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. இனி மேல் விறகுவெட்டி சந்தன மரங்களை வெட்டி விற்பான். சந்தன மரங்கள் மிகவும் விலை உயர்ந்தது.ஒவ்வொரு மரமும் ஒரு லட்சம் விலை பெறும். எனவே விறகுவெட்டி வீடி, நிலம் என்று எல்லா வசதியும் பெற்று சுகமாக இருப்பான் என்று நினைத்தான் மன்னன்.விறகுவெட்டியும் அது மாதிரியே சந்தன மரத்தை விற்று நல்ல வசதியாக வாழ்ந்தான்.
ஆண்டுகள் பல கடந்தன. ஒரு நாள் அரசன் வேட்டையாடி விட்டு திரும்பும் பொழுது ஒரு செல்வந்தரைப் பார்த்தார்.
மக்கள் அவரிடம் மிக்க மரியாதையுடன் நடந்து கொண்டனர்.உடனே அரசன் தன் காவலாளிகளை அனுப்பி அந்த செல்வந்தரை அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார்.அரசர் அவரைப் பார்த்து ,” ஐயா நீங்கள் யார் என்று தெரியவில்லை. மக்கள் உங்களை மிகவும் மரியாதையாக நடத்துகின்றார்கள்,” என்று சொன்னார்.அதற்கு அந்த செல்வந்தர், “அரசே என்னை உங்களுக்கு தெரியவில்லையா? நான் தான் அந்த விறகுவெட்டி. நீங்கள் எனக்கு தானமாக கொடுத்த சந்தனக்காட்டை வைத்து , அதிலுள்ள மரங்களை விற்று நான் பெரும் பணக்காரன் ஆனேன். நானும் என் மனைவியும் வீடு, நிலம் வாங்கி நிம்மதியாக இருக்கின்றோம்,” என்றார்.அரசர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.அரசர் அந்த பெரியாரைப் பார்த்து,” மக்கள் உங்களக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்து மரியாதையாக நடத்துகின்றார்கள். அதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு அவர் ,” அரசே எனக்கு கிடைக்கும் பெரும் பணத்தில் நான் மக்களுக்கு பயன்படும்படி பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை பல கட்டி உள்ளேன்.மேலும் சிலருக்கு சொந்தமாக தொழில் துவங்க பண உதவி செய்துள்ளேன்,” என்றார்.எனவே மக்கள் என் மீது பேரன்பு வைத்துள்ளனர் என்றார். மன்னர் தான் செய்த தானம் எப்படி எல்லாம் நற்பலன்கள் விளைவிக்கிறது என்று எண்ணி மனதிற்குள் மகிழ்ந்தார். அந்த பெரியவரையும் நன்கு பாராட்டினார்.
ஆகவே குழந்தைகளே தானம் செய்வது மிகவும் சிறந்தது.நாம் ஒருவருக்கு ஒருவர் தானம் அளிப்பதால் பலறும் பயன்படுகிறார்கள். எனவே நாம் எல்லோருக்கும் தானம் செய்யும் நற்பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குமுதம் சதாசிவம்.
By Kumudham Sadasivam – Auckland